கொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் 200 நாடுகளில் கட்டுப்படுத்தப்பட்ட ஊரடங்கானது அமலில் உள்ளது. இதனால் டோக்கியோ ஒலிம்பிக், டி 20 உலகக் கோப்பை உட்பட எந்தப் போட்டிகளும் நடைபெறவில்லை.
தற்போது பெரிய அளவிலான நஷ்டம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 13 ஆம் தேதி வரை நடக்கிறது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த போட்டியானது உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது. ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக அமெரிக்க ஓபனில் இருந்து விலகுவதாக வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி அறிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, “நான் சின்சினாட்டி ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டியில் இந்த ஆண்டு பங்குபெற மாட்டேன். தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்கா செல்வது சரியான முடிவாக இருக்காது.
அமெரிக்க ஓபன் மற்றும் சின்சினாட்டி என்ற இரண்டு போட்டிகளுமே என்னுடைய ஃபேவரைட் போட்டிகள். ஆனால் அங்கு செல்வது அச்சுறுத்தலாக உள்ளதால், நான் போட்டியில் பங்கேற்க வேண்டாம் என்ற முடிவினை எடுத்துள்ளேன்.
2022 ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னீஸ் போட்டியில் பங்குபெறுவது குறித்து நான் எதிர்பார்த்து இருக்கிறேன். பிரெஞ்ச் ஓபனில் கலந்து கொள்வது குறித்து அப்போதைய சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டே முடிவு எடுப்பேன்” என்று கூறியுள்ளார்.